செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த கவர்னருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையில் ஆய்வு பணி இல்லை: மீனாட்சி அம்மன் கோவிலில் கவர்னர் தரிசனம்

Published On 2017-12-20 06:11 GMT   |   Update On 2017-12-20 06:11 GMT
கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

மதுரை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு 8.30 மணிக்கு மதுரை வந்தார். மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால், தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் விருந்தினர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தங்கினார்.

இன்று காலை 9.15 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் சார்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி, சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள பொற்றாமரை குளத்தை பார்வையிட்டார்.

கவர்னர் வருகையை யொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சாமி கும்பிட்ட பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் கவர்னர் 32 ஆயிரத்து 787 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். பல்கலைக்கழக நிகழ்ச்சி முடிந்ததும் காரில் திருச்சிக்கு செல்கிறார்.

கவர்னரின் வருகையை யொட்டி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக கடந்த மாதம் 14-ந்தேதி கோவையிலும், அதைத்தொடர்ந்து திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தனார்.

அதுபோன்று மதுரையிலும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு பணி எதுவும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த கவர்னரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

நாளை மறுநாள் (22-ந் தேதி) கவர்னர் பன்வாரி லால் புரோகித் மீண்டும் மதுரை வருகிறார். 23-ந்தேதி ராமேசுவரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மதுரையில் 2 நாட்கள் தங்கும் கவர்னர் ஆய்வு பணியில் ஈடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



Tags:    

Similar News