செய்திகள்
தட்டாஞ்சாவடி செந்தில் அபகரித்துள்ள வீட்டு மனைகளை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ரூ.22 கோடி வீட்டு மனைகள் அபகரிப்பு: தாதா செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவு

Published On 2017-12-16 05:24 GMT   |   Update On 2017-12-16 05:24 GMT
புதுவையில் ரூ.22 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகளை அபகரித்த பிரபல தாதாவான தட்டாஞ்சாவடி செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி தனக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதுபோல் சென்னை பெருங்குடி திருமலை நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரத்தினவேல் (வயது 59) உள்பட பலர் தங்கள் வாங்கிய ரூ.22 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகளை புதுவையை சேர்ந்த பிரபல தாதாவான தட்டாஞ்சாவடி செந்தில் அபகரிப்பு செய்துள்ளதாக கவர்னர் கிரண்பேடிக்கு புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை தட்டாஞ்சாவடி பகுதி நேதாஜி பாரதி நகரில் தாதா செந்தில் அபகரித்து வைத்திருந்த வீட்டு மனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் ரூ. 22 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகளை அபகரித்துள்ள தட்டாஞ்சாவடி செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு போலீஸ் அதிகாரிகள் தட்டாஞ்சாவடி செந்தில் முக்கிய அரசியல் பிரமுகருடன் தொடர்பில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து தட்டாஞ்சாவடி செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

மேலும் ரவுடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விவரம் மற்றும் ஆதாரங்களை சேகரித்து தனக்கு பட்டியல் அளிக்கும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சனுக்கு கவர்னர் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் வீட்டு மனை வாங்கியவர்கள் தங்களது இடங்களில் வீடு கட்டி வசிக்கலாம். அதற்கு புதுவை காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கும். இதனை யாராவது தடுக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவையில் சட்டத்தின் கீழ் ஆட்சி நடக்கிறது. ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது. ரவுடிகளுக்கு இங்கு இடமில்லை. 10 ஆண்டுகளாக ரவுடிகளால் மிரட்டப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தட்டாஞ்சாவடி செந்தில் தற்போது மடுவுபேட் முரளி கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

Similar News