செய்திகள்

எட்வின்ஜோ, ரேவதிகயிலைராஜன் ஆகிய இருவரையும் மருத்துவ கல்வி இயக்குனராக நியமித்த உத்தரவுகள் ரத்து

Published On 2017-12-13 02:56 GMT   |   Update On 2017-12-13 02:56 GMT
எட்வின் ஜோ, ரேவதிகயிலைராஜன் ஆகிய இருவரையும் மருத்துவ கல்வி இயக்குனராக நியமித்த உத்தரவுகளை ரத்துசெய்த மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், வேறு ஒருவரை நியமிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக பணிபுரிந்த டாக்டர் விமலா ஓய்வு பெற்றதையடுத்து கோவை அரசு மருத்துவமனை டீனாக பணிபுரிந்த டாக்டர் எட்வின்ஜோ 25.4.2017-ல் மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்தும், உடனடியாக ரேவதிகயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.

இதற்கிடையே மருத்துவ கல்வி இயக்குனராக பதவி வகிக்க தனக்கு தகுதியிருப்பதாக கூறி, திருவாரூர் அரசு மருத்துவமனை டீன் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் தாக்கல் செய்த மனுவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

“மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் விதிப்படி நடைபெறவில்லை. இதனால் மருத்துவ கல்லூரி இயக்குனராக எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

பதவி உயர்வை பொறுத்தவரை கோர்ட்டு நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அந்த வகையில் ரேவதி கயிலைராஜன் 2018 பிப்ரவரி மாதம் ஓய்வுபெற உள்ளதால் அவரை உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனராக நியமித்து, அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

பணி மூப்பு, போதிய கல்வித்தகுதி உள்ள ஒருவரை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க சுகாதாரத்துறை செயலாளர் 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News