செய்திகள்

ஒக்கி புயலில் மாயமான நாகை மீனவர்களை மீட்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

Published On 2017-12-12 08:25 GMT   |   Update On 2017-12-12 08:25 GMT
ஒக்கி புயலில் மாயமான நாகை மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதிப்பால் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாகி உள்ளனர்.

நாகை நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை கடற்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். புயலில் சிக்கிய அவர்கள் கதி என்ன? என்பது தெரியாமலேயே உள்ளது.

இதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி குமரி மாவட்டம் சென்றார். அங்கு இரவிபுத்தூர் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன் துறை பகுதிகளுக்கு சென்று போராட்டம் நடத்தும் மீனவ மக்களை சந்தித்து பேசினார். வள்ள விளையில் பகுதி நாகை மீனவர்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாயமான மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க பேரிடர் மீட்பு குழுவினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். 1000 கி.மீ. தூரத்துக்கு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த வேண்டும். நாகை மீனவர்கள் 12 பேர் பற்றிய விவரங்களை குமரி மாவட்டம் சென்று பேரிடர் மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்துள்ளேன்.

காணாமல் போன நாகை மீனவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ளேன். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக் காணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News