செய்திகள்

ஆர்.கே. நகர் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பு இல்லை: தங்க தமிழ்செல்வன்

Published On 2017-12-08 04:09 GMT   |   Update On 2017-12-08 04:09 GMT
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பு இல்லை என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
திண்டுக்கல்:

ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமண விழாவில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர். கே. நகர் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பு இல்லை. நடிகர் விஷால், தீபா மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு கட்சியையும், கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது அனைவருக்கும் தெரியும். அவர்கள் முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்டட்டும்.

தேர்தலில் எங்கள் அணிக்கு தொப்பி சின்னம் கிடைக்காததற்கு சதி நடைபெற்றுள்ளது. தைரியம் இருந்தால் எங்களுக்கு தொப்பி சின்னத்தை கொடுத்து விட்டு அவர்கள் போட்டியிடட்டும். எந்த சின்னம் கிடைத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். மீண்டும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவோம். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்ததில் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே பயன் அடைந்துள்ளார்.

தற்போது துரோக கும்பலிடம் இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்கிறது. அதனால் அந்த சின்னத்தின் மதிப்பு மக்களிடம் குறைந்து விட்டது. தினகரன் இல்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் அப்போது முதல்-அமைச்சராக வந்திருக்க முடியாது.

சசிகலாவினால் உருவாக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார். தேர்தல் நடத்துவதற்கு முன்பே இவ்வளவு சிக்கல் ஏற்படுகிறது. இவர்களிடம் பணம் பட்டுவாடா செய்பவர்களை பிடித்து கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்களா? என்று கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News