செய்திகள்
கழிவறையை சுத்தம் செய்யும் மாணவிகள்.

திருவள்ளூர் அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்

Published On 2017-11-28 09:40 GMT   |   Update On 2017-11-28 09:40 GMT
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மா.பொ.சி. நகரில் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒவ்வொரு வகுப்பில் உள்ள தலைவர் மற்றும் துணை தலைவராக உள்ள மாணவிகளை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவிகள் தினந்தோறும் கழிவறையை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெறும் கையால் சுத்தம் செய்து வந்தனர்.

இதனால் மாணவிகள் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதுபற்றி அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பள்ளியில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் மாணவிகளிடம் விசாரணை நடத்திய காட்சி.

இதனை தொடர்ந்து இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளிக்கு வந்தார். அவர் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் கழிவறையை சுத்தம் செய்ய கூறியது யார் என்பது குறித்து மாணவிகளிடமும் விசாரணை செய்தார். இதனால் இன்று காலை பள்ளிக்கூடம் பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணை அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News