செய்திகள்

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது: ஜி.கே.வாசன்

Published On 2017-11-21 08:27 GMT   |   Update On 2017-11-21 08:28 GMT
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை:

த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் அனுராதா அபி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் அண்ணாநகர் ராம்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் த.மா.கா.வில் இணையும் விழா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.

கட்சியில் இணைந்தவர்களை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்தி வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

த.மா.கா. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. தேர்தல் நேரத்தில் முதல் வரிசையில் அமரும் வகையில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.

ஆளும் அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் தனிக்கட்சி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள். சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை என்பது தனி அமைப்பு, எனவே சோதனை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் பலவீனமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.

சின்னம் கூட இல்லாத நிலையில் ஆளும் கட்சி குழப்பத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கவர்னர் தனிப்பட்ட முறையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.

டெல்லியில் பல நண்பர்களை நான் சந்திப்பது உண்டு. ஆனால் அதுபற்றி தவறான வதந்தி பரப்புவது கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோருக்கும் தெரிந்த கட்சி.

அந்த கட்சியின் தலைவராக இருக்கும் ராகுல் பொறுப்பேற்கப் போகிறார். மத சார்பற்ற கூட்டணியின் தலைவராக அவர் இருப்பார். அவருக்கு என் வாழ்த்துக்கள். தேர்தல் நேரத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய நேர்மையான ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையும் போது கூட்டணி பற்றி பரிசீலிப்போம். கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை தங்கம், ஞானசேகரன், விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சீனி வாசன், அசோகன், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், ரவிச்சந்திரன், சைதை நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News