செய்திகள்

நகைக்கடையில் கொள்ளை: 2 கொள்ளையர்கள் உருவ படம் வெளியீடு- பொதுமக்கள் தகவல் தரலாம்

Published On 2017-11-18 10:12 GMT   |   Update On 2017-11-18 10:12 GMT
நகைக்கடை கொள்ளையில் ஈடுப்பட்ட 2 கொள்ளையர்கள் புகைப்படத்தை போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்டு தகவல் தரலாம் என்று கூறியுள்ளனர்.

சென்னை:

சென்னையை அடுத்த ரெட்டேரி-கடப்பா சாலை முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள நகைக் கடையில் நேற்று முன்தினம் 3½ கிலோ தங்க நகையும், 4½ கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

நகைக் கடையின் மேல் தளத்தில் துளைப்போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளையில் வட மாநில வாலிபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

துளை போடப்பட்ட இடத்தில் கிடந்த சுத்தியல், காலி நகை பெட்டி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி கைரேகையை பதிவு செய்தனர்.

மேலும் நகைக்கடை அருகே உள்ள ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் போட்டோ பதிவாகி இருந்தது. 2 வாலிபர்கள் பெரிய பைகளை தூக்கி செல்வது போன்ற காட்சி அதில் இடம் பெற்று இருந்தது.

இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வடமாநில கொள்ளையர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது உறுதியானது.

கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை தேடி போலீசார் வடமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் கேமராவில் பதிவான புகைப்படத்தில் உள்ளவர்களும் வாடகைக்கு கடை கேட்டு வந்த வாலிபர்களும் ஒன்றுதான் என்று உறுதியானதால் அவர்களை பற்றிய முழு விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

அந்த வாலிபர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர். தினேஷ் சவுத்திரி (17), நாத்தூராம் (25) ஆகிய இருவரும் சேர்ந்து நகைக் கடையில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள் என்பது போலீசாரின் புலன் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இருவரின் புகைப்படத்தையும் போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்டு உள்ளனர். இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது ராஜமங்கலம் போலீஸ் நிலையத்திற்கோ தெரிவிக்கலாம் என வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News