செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது

Published On 2017-11-13 07:15 GMT   |   Update On 2017-11-13 07:15 GMT
அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
 
கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உருக்கமான சம்பவத்திற்கு பிறகு அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கொண்டு செல்லும் பை உள்பட அனைத்து உடமைகளும் பரிசோதனைக்கு பிறகே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலும் போலீசார் இதுபோன்ற பாதுகாப்பு பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். திங்கட்கிழமைதோறும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெறும். அந்த நாளில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுப்பது வழக்கம். இதனால் மனுநீதி நாளின் போது போலீசார் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் மனுநீதி நாளான இன்று குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சுசீந்திரம் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டதாகவும், மனுநீதி நாளின் போதும் கலெக்டரிடம் அது தொடர்பாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டி இந்த தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இதைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆவுடைகண்ணன், கவிதா, ராமஜெயநாயர், கேப்டன் சிவா ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது திடீரென ஆவுடைகண்ணன், பாட்டிலில் தான் வைத்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் மடக்கி பிடித்து அவர் தீக்குளிப்பதை தடுத்தனர். அவர் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தீக்குளிப்பு போராட்டத்துக்கு வந்த 5 பேரையும் கைது செய்தனர்.

ஆவுடை கண்ணன் மீது மண்எண்ணெய் ஊற்றப்பட்டு இருந்ததால் அவரை மட்டும் போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

கைதானவர்களில் ஆவுடைகண்ணனும், கவிதாவும் கணவன்-மனைவி ஆவர்.
Tags:    

Similar News