செய்திகள்

கடையநல்லூரில் இன்று காலை விபத்து - ‘வாக்கிங்’ சென்ற 2 பேர் லாரி மோதி பலி

Published On 2017-10-24 05:11 GMT   |   Update On 2017-10-24 05:11 GMT
கடையநல்லூரில் இன்று காலை ‘வாக்கிங்’ சென்றவர்கள் மீது லாரி மோதியதில் இடிபாடுகளில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கடையநல்லூர்:

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பெரிய தெருவை சேர்ந்தவர் முன்னா முகமது (வயது65). மேல கடையநல்லூரை சேர்ந்தவர் கடற்கரை (61). இவர்கள் இருவரும் இன்று காலை வழக்கம் போல மங்களாபுரத்தில் இருந்து கடையநல்லூர் நோக்கி வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.

காலை 7.30 மணியளவில் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி முன்னா முகம்மது, கடற்கரை ஆகிய இருவர் மீதும் பயங்கர வேகத்தில் மோதி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீதும் மோதி நின்றது. பின்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி மில்டன் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய்காந்தி வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். கடையநல்லூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்படாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே விபத்துகளை தடுக்க நகர் பகுதியில் உடனடியாக பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News