செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published On 2017-10-22 09:49 GMT   |   Update On 2017-10-22 09:49 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியுள்ளார்.

சென்னை:

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களை மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது எவர்வின் பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமையும் அவர் பார்வையிட்டார்.

முகாமில் டெங்கு பரப்பும் கொசுக்கள் எப்படி உற்பத்தியாகிறது. அதை தடுக்கும் விதம், டெங்கு வந்தால் செய்ய வேண்டிய விதம் பற்றி விரிவாக விளக்கப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. முகாமை ரோட்டரி கிளப் ஆப் ஜெமினி மற்றும் கார்பரேசனும் இணைந்து நடத்தினர்.

கலெக்டர் அன்புசெல்வன், டாக்டர் ரேணுகா, ரோட்டரி சங்க தலைவர் ரவி சக்ரவர்த்தி, பள்ளியின் மூத்த முதல்வர் புருஷோத்தமன், முதல்வர் கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆணையர் சென்னை மாவட்டத்தில் 11 ஆயிரம் இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக கூறுகிறார். ஆனால் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அந்த தொகுதியில் 89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததால் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதில் முதல்-அமைச்சர் பெயர் கூட இருக்கிறது. அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கிறது. முறையாக வழக்கு போட்டு விட்டு தேர்தலை நடத்த வேண்டும்.

குதிரை பேர அ.தி.மு.க. அரசு முழுவதுமாக மத்திய அரசிடம் சரணாகதி அடைந்து கிடக்கிறது.

தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. மைனாரிட்டியாக இருந்து ஆட்சி நடத்தியதாக முதல்- அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி நடத்தினோம். இது தான் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News