செய்திகள்

தமிழக அரசுக்கு மதுபான விலை உயர்வால் மேலும் ரூ.5000 கோடி கிடைக்கும்

Published On 2017-10-14 07:10 GMT   |   Update On 2017-10-14 07:10 GMT
மதுபானங்களின் விலை உயர்வால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.5000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சமீபத்தில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் ‘டாஸ்மாக்’ மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மாநிலத்தின் நிதி பற்றாக்குறையை சமாளிக்கவே இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.

டாஸ்மாக் மதுக்கடைகளில் பல்வேறு கம்பெனிகளின் தயாரிப்புக்கு ஏற்ப குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண ரக பிராந்தி ரூ.88-ல் இருந்து ரூ.100 ஆகவும், விஸ்கி, ரம், போன்றவை ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.5000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக பல கடைகளை திறக்க முடியவில்லை. போராட்டத்தின் போது மதுக்கடைகள் மீது தாக்குதல் நடந்ததால் சேதம் அடைந்து இழப்பு ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 5,000 கடைகள் மூலம் ரூ.22,000 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது விலை உயர்வு மூலம் ஆண்டு வருமானம் ரூ.27,000 கோடி ஆக அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

சமீபத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசு படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.14,719 கோடி நிதிபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க பல்வேறு வழிகளில் நிதி ஆதாரங்களை அரசு திரட்டி வருகிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News