செய்திகள்

கட்டண சலுகை அறிவித்து பயணிகளை அழைக்கும் மெட்ரோ ரெயில்

Published On 2017-09-22 09:05 GMT   |   Update On 2017-09-22 09:05 GMT
ஆடி தள்ளுபடி என்ற உத்தியை மெட்ரோ ரெயில் நிறுவனம் கையாண்டு இருப்பது சென்னை வாசிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:

ஜவுளிக்கடைகளும், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகள், செல்போன் கடைகள் போன்றவை தான் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கும்.

குறிப்பாக ஆடி தள்ளுபடி என்பது பிரபலம். இந்த காலகட்டத்தில் ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதும்.

வியாபாரத்தை பெருக்கும் இந்த உத்தியை பெரும்பாலான நிறுவனங்கள் கடை பிடிக்கின்றன.

இதேபோன்ற வியாபார உத்தியை மெட்ரோ ரெயில் நிறுவனமும் கையாண்டு இருப்பது சென்னை வாசிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் செனாய் நகரில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலையில் இருந்து விமானநிலையம் வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. பணிகள் நிறைவடையாததால் முழு அளவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கத்துக்கு வரவில்லை.

மெட்ரோ ரெயில்கள் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டதும் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

கட்டணம் குறைந்த பட்சம் ரூ.40 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் மெட்ரோ ரெயில் பக்கம் மக்கள் திரும்பவில்லை. பஸ் கட்டணம், ஆட்டோ கட்டணத்தை மிஞ்சிய அளவில் கட்டணம் இருப்பதால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

காலை, மாலை நேரங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஓரளவு பயணிக்கிறார்கள். மற்ற நேரங்களில் கூட்டம் இல்லாமல் காற்றாடுகிறது.

கூட்டம் இல்லாமல் நஷ்டத்தில் இயக்குவதை விட பொருட்கள் விற்பனையை போல் தள்ளுபடி போட ரெயில்வே நிர்வாகமும் முடிவு செய்து விட்டது.

கடந்த கோடை விடுமுறையில் டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.

இதனால் குஷியடைந்த அதிகாரிகள் இப்போதும் விழாக்கால தள்ளுபடி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி என்ற அறிவிப்பை பெரிய அளவில் அச்சிட்டு அனைத்து ரெயில் நிலைய வாசலிலும் பிரமாண்ட பேனர்களாக வைத்துள்ளனர்.

இந்த பக்கம் திரும்பி பாருங்க! டிக்கெட்டில் தள்ளுபடி இருக்கு. வாங்க... வாங்க... என்று அழைப்பது போல் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. எப்படியோ விற்பனை சூடு பிடித்தால் நல்லதுதான்.
Tags:    

Similar News