செய்திகள்

பொதுக்குழுவை நாங்கள் விரைவில் கூட்டுவோம்: மன்னார்குடியில் திவாகரன் பேட்டி

Published On 2017-09-13 04:14 GMT   |   Update On 2017-09-13 04:14 GMT
சசிகலாவின் அனுமதி பெற்று விரைவில் பொதுக்குழுவை முறைப்படி கூட்டுவோம் என மன்னார்குடியில் திவாகரன் பேட்டியளித்துள்ளார்.
மன்னார்குடி:

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா தம்பி திவாகரன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.பன்னீர் செல்வம் தரப்பினரால் கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுவே செல்லாது என தீர்ப்பு வரும் பட்சத்தில் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாமல் ஆகி விடும்.

பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதலே மிக குழப்பமான மனநிலையில் அனுப்பி உள்ளனர். அமைச்சர் பதவியை பயன்படுத்தி இந்த பொதுக்குழுவை நடத்தி உள்ளனர்.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா தான் நீடிக்கிறார். உண்மையான தொண்டர்கள் சசிகலா பக்கமும், டி.டி.வி. தினகரன் பக்கமும் தான் உள்ளனர்.

சசிகலாவின் அனுமதி பெற்று விரைவில் பொதுக்குழுவை முறைப்படி கூட்டுவோம். தற்போது தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களையும் விலைக்கு வாங்க குதிரை பேரம் நடக்கிறது. ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டிய கவர்னர் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை.

டி.டி.வி. தினகரன் நியமித்துள்ள நிர்வாகிகளுக்கு தொண்டர்களிடையே உள்ள செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாமல் அவர்கள் மீது எதிர் தரப்பினர் பொய் வழக்கு போடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் போடுகின்ற பொய் வழக்கை சட்டப்படி நாங்கள் சந்திப்போம். எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும். ஊழல் மிகுந்த அமைச்சர்களை நீக்க வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு திவாகரன் கூறினார்.
Tags:    

Similar News