செய்திகள்

திண்டுக்கல் அருகே வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2017-09-11 08:24 GMT   |   Update On 2017-09-11 08:24 GMT
திண்டுக்கல் அருகே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திடீரென திண்டுக்கல்- பழனி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், கல்வியை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சம்பம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற ரெட்டியார்சத்திரம் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் இவ்வாறு மறியலில் ஈடுபடக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து கல்லூரி வளாகத்திற்குள் சென்ற சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News