செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை

Published On 2017-08-25 16:31 GMT   |   Update On 2017-08-25 16:32 GMT
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு சேலத்திற்கு வருகிறார்.

சேலம்:

தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவுக்கான இடம் தேர்வு குறித்து மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் சேலம் போஸ் மைதானம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி வளாகம், சோனா கல்லூரி வளாகம், கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (26-ந் தேதி) இரவு விமானம் மூலம் கோவை வழியாக சேலத்திற்கு வருகிறார். பின்னர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

பின்னர் இரவில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கும் அவர் மறுநாள் காலை திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் இன்று இரவு முதல் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் வருகிற 8-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் விழாவிலும் முதல்-அமைச்சர் பங்கேற்பார் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News