செய்திகள்

நீதி விசாரணை என்பது காலம் கடந்த அறிவிப்பு: தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ.

Published On 2017-08-18 04:40 GMT   |   Update On 2017-08-18 04:40 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தட்டும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இது காலம் கடந்த அறிவிப்பு என்று தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.
தேனி:

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க.(அம்மா அணி) தேனி மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வனிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- நீதிவிசாரணை நடத்தட்டும். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இது காலம் கடந்த அறிவிப்பு.

கேள்வி:- ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ நினைவிடமாக மாற்றுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- அம்மாவுக்கு வாரிசு உள்ளது. வாரிசு உள்ள நிலையில் எப்படி நினைவு இடமாக மாற்ற முடியும் என்று தெரியவில்லை. சட்டத்தில் அதற்கான இடம் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

கேள்வி:- நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை முன் வைத்து இருந்த நிலையில் தற்போது நீதி விசாரணை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தால் அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மக்களின் எண்ணம் அறிந்து வெளியிட்ட அறிவிப்பு என்றால் ஏற்கிறேன்.

இவ்வாறு தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.

Tags:    

Similar News