செய்திகள்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கட்டுமான பொருட்களை பார்வையிட்டு அவற்றை அகற்ற நாராயணசாமி உத்தரவிட்ட காட்சி.

திடீர் போக்குவரத்து நெரிசல்: சாலையில் இறங்கி நடந்து ஆய்வு செய்த நாராயணசாமி

Published On 2017-08-14 10:08 GMT   |   Update On 2017-08-14 10:08 GMT
உப்பளம் அம்பேத்கார் சாலையில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து காரில் இருந்து இறங்கி நடந்து சென்று முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை அரியாங்குப்பம் தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து விட்டு காரில் உப்பளம் அம்பேத்கார் சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.

இதையடுத்து காரை விட்டு இறங்கிய முதல்- அமைச்சர் நாராயணசாமி போக்குவரத்து நெரிசலுக்கான காரணத்தை அறிய சம்பவ இடத்துக்கு நடந்தே சென்றார்.

அப்போது ஒருவர் வீடு கட்டுவதற்காக சாலையில் கட்டுமான பொருட்களையும், ஜல்லி கலக்கும் எந்திரத்தை நடுரோட்டில் நிறுத்தி இருந்ததுதான் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் என்பதை கண்டார்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளரையும், கட்டிட காண்டிராக்டரையும் அழைத்த நாராயணசாமி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இதுபோன்ற கட்டுமான பொருட்களை நடுரோட்டில் கொட்டி வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் இதுபோல் வேறு எங்கேனும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கட்டுமான பொருட்களை நடுரோட்டில் குவித்து வைத்தால் நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News