செய்திகள்

வறட்சியின் பிடியில் புதுவை சிக்கும் அபாயம்: விவசாயிகள் வேதனை

Published On 2017-08-12 05:58 GMT   |   Update On 2017-08-12 05:58 GMT
இந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யாததால் கடந்த ஆண்டை போல வறட்சியின் பிடியில் சிக்கி விடுவோமோ? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

தென்கிழக்கு பருவ மழை புதுவையில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை புதுவையில் மழை காலம் ஆகும். இந்த 3 மாதங்களிலும், வட கிழக்கு பருவ மழை பெய்யும். ஆண்டுக்கு சராசரியாக 1,250 மி.மீட்டர் மழை பதிவாகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவ மழையை கணிக்க முடியவில்லை. ஏனெனில் கடந்த 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவு 2 ஆயிரத்து 381 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

அதே வேளையில் கடந்த ஆண்டு 657.10 மி.மீட்டர் மழை மட்டுமே பதிவானது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை கை கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக மழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

வழக்கமாக பனி பொழியும் காலமான ஜனவரி மாதத்தில் புதுவையில் மழை இருக்காது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 114.80 மி.மீட்டர் மழை பெய்தது.

இதன் பிறகு அடுத்த 7 மாதங்களாக மழையே இல்லை. வெயில கடுமையாக சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளது.

அவ்வப்போது கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறி தோன்றும். ஆனால், இதுநாள் வரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

தமிழகத்தின் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் புதுவையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென வானம் மப்பும் மந்தாரமாக மாறியது. குளிர்ந்த காற்றும் வீசியது. பலத்த ஓசையுடன் இடியும்- மின்னலும் இருந்தது.

இதனால், கனமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், மழை பெய்யவில்லை. நள்ளிரவில் சிறிது நேரம் மட்டுமே மழை பெய்தது.

சராசரி மழை அளவை எட்ட இன்னும் 967 மி.மீட்டர் மழை தேவைப்படுகிறது. ஆனால், அவ்வளவு பருவ மழை பொழியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வறட்சியின் பிடியில் சிக்கி விடுவோமோ? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News