செய்திகள்

நகைக்காக பெண் படுகொலை: கணவன்-மனைவி வெறிச்செயல்

Published On 2017-08-10 09:34 GMT   |   Update On 2017-08-10 09:34 GMT
திருச்சி அருகே நகை, பணத்திற்காக பெண்ணை கணவன்-மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திறுவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திறுவெறும்பூர் கல்லணை ரோடு வாரியார் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 61). இவர்களுக்கு ஈஸ்வரி, ராஜேஸ்வரி என்ற 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார். இவரது மனைவி ரேவதி (45). இவர்களுக்கு நவின்குமார் (21), சுந்தரேஸ்வரர் என்ற 2 மகன்கள் உள்ளனர். ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் முத்துலட்சுமியும், ரேவதியும் நட்புடன் பழகி வந்தனர். ரேவதிக்கு பணக்கஷ்டம் ஏற்பட்ட போது முத்துலட்சுமி பணம் கொடுத்து உதவி வந்தார். அந்த விசுவாசத்திற்காக அடிக்கடி ரேவதி முத்துலட்சுமியின் வீட்டிற்கு வந்துசெல்வதோடு வீட்டில் உள்ளவர்களிடமும் உறவினர் போல் பழகி வந்தார்.

இந்த நிலையில் ரேவதிக்கு மீண்டும் பணக்கஷ்டம் ஏற்பட்டது. உடனே அவர் முத்துலட்சுமியிடம் தனக்கு பணம் கொடுத்து உதவும்படி கேட்டார். ஆனால் முத்துலட்சுமி தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் ரேவதிக்கு முத்துலட்சுமி மீது வெறுப்பு ஏற்பட்டது.

நேற்று மாலை முத்துலட்சுமியின் மகள் ஈஸ்வரி பால் வாங்க கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது முத்துலட்சுமி வீட்டில் இல்லை. பல இடங்களில் உறவினர்கள் தேடி பார்த்தும் முத்துலட்சுமி பற்றி எந்த தகவலும் இல்லை.

இது குறித்து திறுவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். வெளியூரில் வசித்து வரும் முத்துலட்சுமியின் அக்காள் இன்பவள்ளி தனது தங்கையை காணவில்லை என்று அறிந்ததும் உடனடியாக அவர் முத்துலட்சுமியின் வீட்டிற்கு வந்தார். அக்காள் மாயமான சோகத்தில் இன்று அதிகாலை அவர் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார்.

அப்போது ரேவதி தனது கணவர் சதீஷ்குமாருடன் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு அந்த வழியாக கடந்து சென்றார். கூடவே அவரது மகன் நவீன்குமாரும் சென்றார். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த இன்பவள்ளி இந்த நேரத்தில் மூட்டையுடன் 3 பேரும் எங்கு செல்கிறார்கள் என்ற கேள்விக்குறியுடன் அவர்களை பின்தொடர்ந்தார்.

இதற்கிடையே ரேவதி, இன்பவள்ளியை பார்த்தவுடன் மூட்டையை போட்டு விட்டு 3 பேரும் தப்பி ஓடினர். ஆனால் இன்பவள்ளி ரேவதியை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். மூட்டையை அவிழ்த்து பார்த்த போது அதில் முத்துலட்சுமி பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் போலீசார் விரைந்து சென்று ரேவதியை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் நகை மற்றும் பணத்திற்காக முத்துலட்சுமியை அடித்து கொன்றது தெரியவந்தது. மேலும் ரேவதியை பார்க்க முத்துலட்சுமி வந்தபோது அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு ரேவதியும் அவரது கணவர் சதிஷ்குமார், அவரது மகன் நவீன்குமார் ஆகிய 3 பேரும் கட்டையால் அடித்து கொன்றது தெரிய வந்தது.

இதைத் தொடந்து போலீசார் தப்பி ஓடிய சதீஷ் குமாரையும் அவரது மகன் நவின்குமாரையும் கைது செய்தனர். முத்துலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நன்றாக பழகி பணத்திற்காக பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News