செய்திகள்

அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் உதவி

Published On 2017-08-09 04:56 GMT   |   Update On 2017-08-09 04:56 GMT
திருச்சி விமான நிலையத்தில் கத்தியுடன் வந்ததால் கைதான அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
சென்னை:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றபோது அவரை வழியனுப்ப வந்த தொண்டர்கள் கூட்டத்தில் சோலைராஜன் என்பவர் கத்தியுடன் பிடிபட்டார்.

பாதுகாப்பு படைவீரர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க வந்ததாக அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சோலைராஜன் அ.தி.மு.க.வில் தீவிர தொண்டன் என்றும், மகளின் திருமணத்திற்காக ஓ.பன்னீர்செல்வத்திடம் பண உதவி பெறுவதற்காகவும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்ததாகவும் அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சோலைராஜன் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தன்னை சந்தித்து உதவி பெற வந்த தொண்டன் தனது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் அடைந்தார்.


சோலைராஜனை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரும்படி ஓ.பி.எஸ். அழைத்தார். அதனையடுத்து சோலைராஜனும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டிற்கு சென்றார்கள். மகளின் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருட்களை அவர் வழங்கினார்.

இதனை சற்றும் எதிர்பாராத சோலைராஜனும், அவரது மனைவியும் கண் கலங்கினார்கள். ஓ.பன்னீர்செல்வம் செய்த உதவியை நினைத்து கையெடுத்து கும்பிட்டு உள்ளம் நெகிழ்ந்தார்கள்.
Tags:    

Similar News