செய்திகள்

செய்யாறு கலவரத்தில் எலக்ட்ரீஷியன் கொலை: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2017-07-26 12:32 GMT   |   Update On 2017-07-26 12:32 GMT
செய்யாறு கலவரத்தில் எலக்ட்ரீஷியன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதியை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. பொன்னி உத்தரவிட்டார்.
செய்யாறு:

செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் கடந்த 23-ந் தேதி இரவு செல்ல பெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நுழைந்து அங்குள்ள வீடுகளை சூறையாடி வாகனங்களுக்கு தீ வைத்தனர். வீடுகளில் இருந்தவர்களையும் சரமாரியாக தாக்கினர். எலக்ட்ரீஷியன் வெங்கடேசன், அவரது தம்பி ஆதிகேசவன் ஆகியோரை பைக்கில் கடத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதில் வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயமடைந்த அவரது தம்பிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் தகராறு காரணமாகவும் கிரிக்கெட் போட்டியில் நடந்த தகராறு காரணமாகவும் மோதல் ஏற்பட்டு கொலை நடந்துள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக சம்பவத்தன்று காலை கிரிக்கெட் போட்டியில் தகராறு செய்ததாக செல்ல பெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை பொதுமக்கள் பிடித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து கிரிக்கெட் போட்டியில் தகராறு ஏற்படுவதற்கு இவர் தான் காரணம் என கூறிச் சென்றனர்.

ஆனால் போலீஸ் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி சாதாரணமாக விசாரணை செய்து விட்டு ராஜேஷை அன்று மாலையே அனுப்பிவிட்டார். ஊருக்கு சென்ற ராஜேஷ் தனது ஆதரவாளர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் புளியரம்பாக்கம் கிராமத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட தோடு வெங்கடேஷை கொலை செய்துள்ளனர்.

ராஜேஷை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என விசாரணையில் ஊர்ஜிதமானது.

அதனால் இந்த வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்டதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதியை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. பொன்னி உத்தரவிட்டார்.

வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு இன்று கொண்டு வரப்படுகிறது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி புளியரம்பாக்கம், செல்ல பெரும்புலிமேடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News