செய்திகள்

உடுமலை அருகே 36 ஆண்டுகளாக சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

Published On 2017-07-25 07:04 GMT   |   Update On 2017-07-25 07:04 GMT
உடுமலை அருகே போலி டாக்டர் ஒருவர் 36 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலை:

பருவநிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதார ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில திருப்பூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையில் கிராம புறங்களில் போலி டாக்டர்கள் உள்ளனரா? என்று கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆஸ்பத்திரி, கிளினிக் ஆகியவைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் உடுமலை தளி பகுதி நேரு வீதியை சேர்ந்த தாசன் (வயது 64) என்பவர் அதே பகுதியில் சித்தா மற்றும் ஆயுர்வேதா கிளினிக் நடத்தி வருவதாகவும். அவர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இணை இயக்குனர் சவுந்தரராஜன், தளி இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் நேற்று இரவு தாசன் வீட்டுக்கு சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பதும். அவர் பிளஸ்-2 வரையே படித்தவர் என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த ஆவணங்களை பார்த்த போது பிளஸ்-2 சான்றிதழ் மட்டுமே இருந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து போலி டாக்டர் தாசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டாக்டருக்கு படிக்காமல் கடந்த 36 ஆண்டுகளாக இந்த பகுதியில் அவர் சிகிச்சை அளித்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோன்று உடுமலை அமராவதி எலையமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார் (25). இவர் கல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார்.

அவர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாணையில் அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலகுமாரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News