செய்திகள்
அப்துல்கலாம் அண்ணனை மயில்சாமி அண்ணாதுரை சந்தித்த காட்சி

சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-க்குள் ஏவப்படும்: மயில்சாமி அண்ணாதுரை உறுதி

Published On 2017-07-21 05:22 GMT   |   Update On 2017-07-21 05:22 GMT
அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை 'சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ம் ஆண்டிற்குள் ஏவப்படும்' என்று கூறினார்.
ராமேசுவரம்:

இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, இன்று காலை ராமேசுவரம் வந்தார். அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்ற அவர் அப்துல் கலாமின் அண்ணன் முகமது மீராலெப்பை மரக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்துல்கலாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.

பின்னர் மணி மண்டபம் சென்ற மயில்சாமி அண்ணாதுரை அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினு லாப்தீன், சமூக ஆர்வலர் கராத்தே பழனிச்சாமி, பேரன்கள் சேக்தாவூத், சேக் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். இந்தியா மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரிடமும் மாணவ-மாணவிகளிடமும் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர். அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.

விண்வெளி ஆராய்ச்சி பாதுகாப்பு துறை என பல்வேறு துறைகளுக்கு ஆலோசகராக இருந்தவர் அப்துல்கலாம். அவரது ஆசைப்படி கடந்த 2 மாதங்களில் 14 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 10 செயற்கை கோள்கள் விஞ்ஞானிகள் மூலமும் 4 செயற்கை கோள்கள் மாணவர்கள் மூலமும் உருவாக்கி ஏவப்பட்டுள்ளது. கலாம் ஆசையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மங்களயான்-1 ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மங்கள்யான்-2 ஏவ திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News