செய்திகள்

வி‌ஷக்காய் தின்ற மாணவ, மாணவிகளிடம் உதவி கலெக்டர் விசாரணை

Published On 2017-07-08 17:35 GMT   |   Update On 2017-07-08 17:35 GMT
தேன்கனிக்கோட்டை அருகே வி‌ஷக்காய் தின்ற மாணவ, மாணவிகளிடம் உதவி கலெக்டர் சந்திரகலா விசாரணை நடத்தினார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பூதட்டிக்கொட்டாய் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் நேற்று முன்தினம் சாப்பாடு இடைவேளை நேரத்தில் அருகில் உள்ள மரத்தில் இருந்து கீழே விழுந்த வி‌ஷக்காய்களை எடுத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் பள்ளியில் இருந்தவாறு அந்த காய்களை உடைத்து சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 33 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 25 மாணவ, மாணவிகள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், 8 பேர் அஞ்செட்டி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளியில் உள்ள சுகாதார வளாகத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், தாங்கள் அருகே உள்ள பகுதிக்கு சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றபோது தான் வி‌ஷக்காய்களை தின்றதாகவும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பள்ளியில் போதிய தண்ணீர் வசதி செய்திட நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் கூறினார். அப்போது தளி ஆணையாளர் சந்தானம், தாசில்தார் மணிமொழி, தளி உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News