செய்திகள்

திண்டுக்கல் அருகே தவறி விழுந்த மாணவரை மீட்க பின்னோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்

Published On 2017-07-04 11:01 GMT   |   Update On 2017-07-04 11:01 GMT
திண்டுக்கல் அருகே ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவரை மீட்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 கி.மீ. பின்னோக்கி சென்றது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே வேல்வார்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருபவர் பிரவீன் (வயது 18). இவர் சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.

முன்பதிவு இல்லாத பெட்டியில் அவர் பயணித்தார். கூட்டம் அதிகம் இருந்ததால் படிக்கட்டில் அமர்ந்து இருந்தார். திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பகுதியில் ரெயில் வந்தபோது பிரவீன் குமார் தூக்க கலக்கத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்.

இதனை நேரில் பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகளிடம் மாணவர் கீழே விழுந்த விவரத்தை தெரிவித்தனர்.

இதனையடுத்து ரெயிலை டிரைவர் மீண்டும் பின்னோக்கி 6 கி.மீ. இயக்கி உயிருக்கு போராடிய மாணவர் பிரவீனை கண்டுபிடித்தனர். அதன்பின்னர் அவரை அதே ரெயிலில் திண்டுக்கல் ரெயில் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாணவரை காப்பாற்ற உதவிய ரெயில் என்ஜின் டிரைவருக்கும், ரெயில்வே அதிகாரிகளுக்கும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News