செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 6 பேர் சிறை பிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2017-06-25 05:01 GMT   |   Update On 2017-06-25 05:01 GMT
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரத்தைச் சேர்ந்த மேலும் 6 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர்.

திடீரென படகுகளை விரட்டியடித்து மீனவர்களை தாக்கினர்.

மேலும் ராமேசுவரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் பால்ராஜ் (வயது 55), நாகநாதன் (30), ராஜூ (35), முருகன் (27), மற்றொரு முருகன் (50), உக்கரம் (35) ஆகிய 6 பேரையும் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 2 படகுகளையும், 10 மீனவர்களையும் பிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.

நேற்று முன்தினம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு படகையும், 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற நிலையில் தற்போது 16 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டது, மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையினரால் பாம்பன், மண்டபம் மீனவர்கள் 10 பேர், தொண்டி, நம்புதாளை மீனவர்கள் 6 பேர், ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர், காரைக்கால் மீனவர்கள் 17 பேர், நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் என 61 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் உள்ளனர்.

Tags:    

Similar News