செய்திகள்

ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட சென்னை மீனவர்கள் 300 பேர்: ரூ.15 லட்சம் கொடுத்து மீட்பு

Published On 2017-06-23 09:48 GMT   |   Update On 2017-06-23 09:48 GMT
ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுடன் 300 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் ரூ.15 லட்சம் வரை ஆந்திர மீனவர்களுக்கு கொடுத்ததாக தெரிகிறது.

ராயபுரம்:

சென்னை, காசிமேடை சேர்ந்த 300 மீனவர்கள் 32 விசைப்படகுகளில் கடந்த 16-ந்தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டினம், மண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது பைபர் படகுகளில் வந்த ஆந்திர மீனவர்கள் திடீரென சுற்றி வளைத்தனர். அவர்கள் 300 மீனவர்களையும், விசைப்படகையும் சிறைபிடித்தனர்.

மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுவிக்க தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டல் விடுத்து வந்தனர்.

இதையடுத்து சென்னை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆந்திர மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து 300 மீனவர்களும், விசைப் படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் ரூ.15 லட்சம் வரை ஆந்திர மீனவர்களுக்கு கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர் நலச்சங்க துணைத் தலைவர் கணேசன் கூறியதாவது:-

ஆந்திர மீனவர்கள் ஆண்டு தோறும் சென்னை மீனவர்களையும், விசைப் படகுகளையும் சிறைபிடித்து மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள். இப்போது சிறை பிடிக்கப்பட்ட 300 மீனவர்களையும், படகுகளையும் மீட்க ரூ.15 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை தடுக்க தமிழக அதிகாரிகள் ஆந்திரா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இது போன்ற சம்பவம் இனி ஏற்படக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News