செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் தூக்கு மேடை ஏறும் நூதன போராட்டம்

Published On 2017-05-20 12:38 GMT   |   Update On 2017-05-20 12:38 GMT
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி தூக்கு மேடை அமைத்து பெண்கள் தங்கள் கழுத்தில் தூக்கு கயிறு கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில், அரியப்புரம் செல்லும் வழியில் அரசு டாஸ்மாக்கடை அமைந்துள்ளது. இக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 5 நாட்களாக சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடையின் எதிரே பந்தல் அமைத்து தினமும் அங்கு சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை நடத்த வந்த தென்காசி தாசில்தாரிடம் மனு அளித்ததில் அரசு கடையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்ட குழுவினர் தினமும் மாறுபட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 5-வது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) தூக்கு மேடை அமைத்து பெண்கள் தங்கள் கழுத்தில் தூக்கு கயிறு கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடையை நிரந்தரமாக மூட கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் போராட்டக்காரர்கள் கூறுகையில், மாவட்ட கலெக்டரை சந்தித்து கடையை மூடக்கோரி மனு அளிக்கவும், அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

பாவூர்சத்திரம்- கடையம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக அகற்றவேண்டுமென பாவூர்சத்திரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண்.10894 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமையாத தாலும், பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாகவும் உடனடியாக மூடவேண்டுமென கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை வரவேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Tags:    

Similar News