செய்திகள்
திண்டிவனம் கொடியம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

தமிழகம் முழுவதும் புதிய மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது - பெண்கள் போராட்டம்

Published On 2017-05-13 06:11 GMT   |   Update On 2017-05-13 06:11 GMT
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான பெண்கள் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக மாநில அரசுகள் மதுக்கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றியும், நெடுஞ்சாலைகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி சாலைகளாக மாற்றியும் வருகின்றன.

தமிழ்நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் இருந்த 3,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த மதுக்கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும் அமைக்க டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குடியிருப்பு பகுதிக்குள் மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சில இடங்களில் பெண்கள் டாஸ்மாக் கடைகளையும் மது பாட்டில்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவானது.

மதுக்கடை பிரச்சினையை கையில் எடுத்த சென்னை ஐகோர்ட்டு பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது.

மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை போலீசார் கைது செய்யக்கூடாது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது, இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினால் அங்கு மதுக்கடை திறக்க கூடாது என்று கூறியது.

இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான பெண்கள் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் வடம் பூண்டி அடுத்துள்ள கொடியம் கிராம எல்லையில் உள்ள ஒரு கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க லாரியின் மூலம் மதுபாட்டில்களை ஊழியர்கள் கொண்டு வந்தனர்.

இதையறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் புதிதாக திறக்கப்பட இருக்கும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடினர். அங்கு இறக்கி வைத்த மதுபாட்டில்களை மீண்டும் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் டாஸ்மாக் கடையை அகற்றிட வேண்டும் என கடந்த மாதம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் “30 நாட்களுக்குள் மதுக்கடை நிரந்தரமாக மூடப்பட்டு விடும்” என்று உறுதியளித்தனர். 30 நாட்கள் தாண்டியும் மதுக்கடை மூடப்படவில்லை.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுக்கடையை திறக்க விடாமல் பூட்டு போட்டனர். கடைக்குள் செல்ல முடியாதபடி சுற்றிலும் முட்செடிகளை போட்டு பாதையை அடைத்தனர்.




நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் முட்செடியை வெட்டிபோட்டு போராட்டம்


கடையை நிரந்தரமாக மூடக்கோரி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். கடையின் முன்பு சமையல் செய்தனர். இன்றும் போராட்டம் நீடித்தது. மதுக்கடை மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். கடையை திறக்க விடாமல் பெண்கள் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வந்து வருகிற 18-ந்தேதி வரை இந்த டாஸ்மாக் கடை செயல்படும். பின்னர் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு போராட்டம் வாபஸ் ஆனது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுடுகாடு அருகில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு சென்று மனு அளித்தனர். எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிச் சென்றனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மாங்குடியில் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் நிறுவன மேலாளர் ராஜகோபால் வந்து கடையை மூடுகிறோம் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அனைத்து மது பாட்டில்களும் வாகனத்தில் ஏற்றப்பட்டு கடை மூடப்பட்டது.
Tags:    

Similar News