செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு இலவசமாக உணவு - தொண்டு நிறுவனம் ஏற்பாடு

Published On 2017-04-30 07:10 GMT   |   Update On 2017-04-30 07:10 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு உணவு வழங்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் பங்களிப்பாளர்களுடன் இணைந்து பசியில்லா மதுரை என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பசியில்லா மதுரை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு தினமும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வெளிநோயாளிகளும், 1000 முதல் 2 ஆயிரம் உள்நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.



இது தவிர நோயாளிகளுடன் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் வருகின்றனர்.

இவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் தினமும் 400 பேருக்கு மட்டுமே குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு உணவு வழங்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் பங்களிப்பாளர்களுடன் இணைந்து பசியில்லா மதுரை என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் நாளன்று 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பொது மக்களும் தனியார் நிறுவனத்தினரும் பசியில்லா மதுரை திட்டத்திற்கான பிரத்யோக ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்து 99942 - 60606 என்ற மொபைல் எண்ணில் ரீசார்ஜ் செய்து தங்கள் பங்களிப்பை வழங்கலாம். ஒருவர் குறைந்தபட்சம் செலுத்தும் 50 ரூபாய் 2 பேருக்கு உணவு வழங்க முடியும்.

மேலும் பசியில்லா மதுரை என்ற வங்கி கணக்கில் இணைய பண பரிமாற்றம் முறையிலும் பங்களிப்பு செய்யலாம். பங்களிப்பாளர்கள் மற்றும் அன்பளிப்பு அதிகளவில் பெறப்படும் பட்சத்தில் கூடுதலான நபர்களுக்கு உணவு வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மாநகராட்சி சார்பில் ஏற்கனவே 5 ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கும் முதியோர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தவிர மேலும் 10 இடங்களில் ஏழைகள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன. அதில் ஒன்று ராஜாஜி மருத்துவமனையில் அமையும்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் சந்தீப் நந்தூரி, உதவி கலெக்டர் (பயிற்சி) விஷ்ணுசந்திரன், மருத் துவமனை முதல்வர் வைரமுத்துராஜா, உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் செந்தில் அண்ணா, சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News