செய்திகள்
கைதான சதீசன், திபு.

கொடநாடு பங்களாவில் இருந்த ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் கொள்ளை: 4 பேர் கைது

Published On 2017-04-30 03:16 GMT   |   Update On 2017-04-30 03:16 GMT
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. இதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி:

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. இதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட குற்றவாளிகள் 3 கார்களில் கொடநாடு எஸ்டேட் வந்துள்ளனர். போலீசார் பிடித்துவிடாமல் இருக்க கார்களில் போலி நம்பர் பிளேட் பொருத்தி உள்ளனர்.

காவலாளி ஓம் பகதூரை கொலை செய்த அந்த கும்பல், மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை கத்தியால் குத்தியதுடன், அவர் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்ததால், அவர் மயங்கினார். இதையடுத்து கும்பல் எஸ்டேட்டுக்குள் புகுந்தனர்.

அங்குள்ள பங்களாவின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், அங்கு நகை-பணம் இருக்கிறதா என்று தேடினார்கள். ஆனால் எதுவும் கையில் சிக்கவில்லை என்பதால், ஷோ-கேசில் இருந்த 5 கைக்கடிகாரங்கள் மற்றும் விலை உயர்ந்த பளிங்கு கற்களால் ஆன பழமைவாய்ந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்தனர்.

அதில் கனகராஜ் மற்றும் சயன் ஆகியோர் ஒரு காரில் கோவைக்கும், மற்ற 2 கார்களில் 6 பேர் கூடலூருக்கு சென்று அங்கு கார்களை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர். மீதமுள்ள 3 பேர் பஸ்சில் தப்பி னார்கள்.

கூடலூரில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 கார்களை பறிமுதல் செய்து நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவை சேர்ந்த கும்பலுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிய வந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலத்தை சேர்ந்த கனகராஜ், அவருடைய நண்பர் சயன் மற்றும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சந்தோஷ் சாமி (வயது 39), திபு (32), சதீசன் (42), உதயகுமார் (47) உள்பட 11 பேருக்கு தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தோம்.

அதைத்தொடர்ந்து விசாரணை நடத்த தனிப்படை கேரளாவுக்கு சென்றது. அப்போது திருச்சூரில் ஒரு இடத்தில் மறைந்து இருந்த சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார் ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை நீலகிரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். அவரு டைய நண்பர் சயன் தனது குடும்பத்துடன் பாலக்காடு அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கிக்கொண்டார். படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொடநாடு பங்களாவில் இருந்து கொள்ளையடித்த 5 கைக்கடிகாரங்களை கேரளாவில் உள்ள ஒரு ஆற்றில் வீசியதாக கைதானவர்கள் தெரிவித்து உள்ளனர். ஷோ-கேசில் இருந்து கொள்ளையடிக்கப் பட்ட பளிங்கு கற்களால் ஆன பழமைவாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது. அதுபோன்று இன்னோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொடநாடு பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 5 கைக்கடிகாரங்களும் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தியது என்று கூறப்படுகிறது. எனவே அந்த கைக்கடிகாரங்கள் எந்த ஆற்றில் வீசப்பட்டது என்று கண்டறிந்து, அதை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Tags:    

Similar News