செய்திகள்
ஜி.கே. மணி பேட்டி அளித்த காட்சி

தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ஜி.கே.மணி

Published On 2017-04-21 10:12 GMT   |   Update On 2017-04-21 10:12 GMT
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதி அனைத்தையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
சேலம்:

சேலத்தில், இன்று பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க.சார்பில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனைபடி, நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றத்தில் வக்கீல் பாலு மூலமாக வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 3000-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும், இந்தியா முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் மூடப்பட்டன. இது இந்திய வரலாற்றில் முக்கியமான தீர்ப்பாகும்.

மனித உயிர்களை காக்கவும், மனித குலத்தை காக்கவும் மது ஓழிப்புக்கு போராடிய பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்காக வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு அஸ்தம்பட்டியில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு பாராட்டு விழா, வெற்றி விழா நடக்கிறது. மேலும் பொது கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், மகளிர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் பெண்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து டாஸ்டாக் கடைகளை திறக்க கூடாது. மீண்டும் திறந்தால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். குஜராத், பீகார், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூரண மது விலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் மேட்டூர் அணை ஒரு வாரத்தில் வறண்டு விடும். மேட்டூர் அணையை நம்பி இருக்கும் மேட்டூர் பொதுமக்கள், சேலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதி அனைத்தையும் மத்திய அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின் எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குடிநீர் தட்டுபாட்டை போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. அவர்களின் பிரச்சனைகளில் அக்கறை காட்டி வருகிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது.

மத்திய அரசு விவசாயிகள் போராட்டம் மீனவர் பிரச்சினை, காவிரி பிரச்சினை ஆகியவற்றில் அக்கறை காட்டாமல் இந்தியை திணிப்பதில் அக்கறை காட்டி வருகிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அதன் தலைவர்கள் தலைமையில் சென்று மத்திய அரசிடம் தமிழகத்தில் வறட்சியை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாநில துணை பொதுச் செயலாளர் இரா.அருள், துணை தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் கதிர்ராசரத்தினம், சாம்ராஜ், பசுமை தாயகம் சத்திரியசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.


Similar News