செய்திகள்

45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2017-04-21 05:36 GMT   |   Update On 2017-04-21 05:36 GMT
45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருவதால் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்:

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. நேற்று இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.

சூறாவளி காற்றுடன் கடலும் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. பாம்பன் ரெயில் பாலம் உயரத்துக்கு அலைகள் எழும்பின.

குறிப்பாக தனுஷ்கோடியில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. ஏற்கனவே அங்குள்ள கடல் ஆபத்தான பகுதி என்பதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி கடலில் குளிப்பார்கள்.

நேற்று கடல் கொந்தளிப்பு காணப்பட்டதால் போலீசார், கண்டிப்பாக குளிக்கக் கூடாது என எச்சரித்து சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர். தனுஷ் கோடியில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன், தனுஷ்கோடி கடலில் சீற்றம் அதிகம் இருந்ததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். தனுஷ் கோடி முகுந்த ராயர் சத்திரம் முதல் அரிச்சல் முனை வரை புதிதாக போடப்பட்டுள்ள சாலையில் காற்றின் காரணமாக மணல்கள் குவிந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காற்று காரணமாக வாகன ஓட்டிகளும் அவதி அடைந்தனர்

நாளை முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். கடல் சீற்றமும் இருக்கும். எனவே நாட்டுப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அதகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Similar News