செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக கேரள விவசாயிகள் ரேக்ளா ஊர்வலம்

Published On 2017-01-21 09:24 GMT   |   Update On 2017-01-21 09:24 GMT
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கேரளாவில் 200-க்கும் அதிகமான வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா ஊர்வலம் நடைபெற்றது.
பொள்ளாச்சி:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி நடை பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழிஞ்சாம்பாறை சுற்று பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கொழிஞ்சாம்பாறையில் ரேக்ளா ஊர்வலம் நடத்தினர். இதில் 200-க்கும் அதிகமான ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

கொழிஞ்சாம்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் 4 கி.மீ. தொலைவிற்கு கேரளா பகுதியில் ஊர்வலம் நடத்தினர். இதில் பங்கேற்றவர்கள் பிட்டா அமைப்பை தடை செய்ய கோரியும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுத்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கேரள விவசாயிகள் கூறுகையில், தமிழர்களும், கேரள மக்களும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம். மாநிலங்களாக வேறுப்பட்டாலும் நாங்கள் இப்போதும் ஒற்றுமையுடன் உள்ளோம். தமிழக மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றனர்.

கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சிறப்பு கூட்டம் கொழிஞ்சாம்பாறையில் நடைபெற்றது. கேரளா மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய, மாநில அரசுகள் நீதிமன்ற சிக்கலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமிழ் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு தருகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் மயில்சாமி, தங்கவேல், ரிச்சார்டு, பாலகிருஷ்ணன், கிருஷ்ணர் மணி, செய்யதுமுகமது, வெள்ளியங்கிரி உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Similar News