செய்திகள்
விராட் கோலி

முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: 4 பந்து வீச்சாளர்களுடன் ஆடுவோம் - விராட்கோலி

Published On 2019-08-22 06:50 GMT   |   Update On 2019-08-22 06:50 GMT
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 4 பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என கேப்டன் விராட் கோலி தெரிவித்து உள்ளார்.
ஆன்டிகுவா:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

20 ஒவரிலும், ஒரு நாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தியது போல டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் ஆர்வத்தில் உள்ளது. வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வது கேப்டன் கோலிக்கு சவாலே. ஏனென்றால் அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் இருப்பதால் அவருக்கு வீரர்கள் தேர்வு சற்று கடினமாக இருக்கும்.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 4 பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள். என கேப்டன் கோலி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஆடுகளத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ‘பிட்ச்‘ மூடப்பட்டு இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை பார்க்கும் போது 4 பந்து வீச்சாளர்களுடன் ஆடுவோம். 3 வேகப்பந்து வீரர், ஒரு சுழற்பந்து வீரர் அல்லது 2 வேகப்பந்து 2 சுழற்பந்து என்ற கணக்கில் களம் இறங்குவோம்.

கடந்த முறை இங்கிலாந்து அணி விளையாடிய போது பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனது. அதை கவனத்தில் கொள்வோம்.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை தவறுகளில் இருந்து வேகமாக பாடம் கற்பது முக்கியமானது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் தோல்வியில் இருந்து தவறை திருத்தி கொள்ள வேண்டும்.

தற்போது டெஸ்ட் போட்டிகள் கடும் சவாலாகவே இருக்கிறது. எல்லா போட்டிகளும் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன.

இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும். 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

லோகேஷ் ராகுல், அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரகானே, ரோகித்சர்மா அல்லது விகாரி, ரி‌ஷப்பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின் அல்லது ஜடேஜா, இஷாந்த்சர்மா, முகமது‌ஷமி, பும்ரா.
Tags:    

Similar News