செய்திகள்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் பெரியசாமி

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது: 21 விக்கெட் வீழ்த்தி பெரியசாமி சாதனை

Published On 2019-08-16 09:01 GMT   |   Update On 2019-08-16 09:01 GMT
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பெரியசாமி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டி.என்.பி.எல். கோப்பையை 2-வது முறையாக வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பெரியசாமி. வேகப்பந்து வீரரான அவர் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி முத்திரை பதித்தார்.

இந்த சீசனில் பெரியசாமி மொத்தம் 21 விக்கெட்டுகளை (9 ஆட்டம்) வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் டி.என்.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இலங்கை வேகப்பந்து வீரர் மலிங்கா பாணியில் பந்து வீசும் பெரியசாமி யாக்கர் வீசுவதில் வல்லவர். இந்த டி.என்.பி.எல். போட்டியில் அவரது பந்து வீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறியிருந்தார்.

அவரது கணிப்புபடியே சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான பெரியசாமி இந்த சீசனில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விட்டார்.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை பெற்ற பெரியசாமி கூறியதாவது:-

இது ஒரு சிறந்த அனுபவம். அணியாக செயல்பட்டு நாங்கள் வெற்றி பெற்றோம். எந்த ஒரு போட்டியில் விளையாடினாலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆடுவேன். அதே போன்றுதான் இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரியசாமி ஆட்டத்தின் 2-வது ஓவரில் அதாவது அவரது முதல் ஓவரில் அவர் 2 விக்கெட்டை (ஜெகதீசன், சதுர்வேத்) வீழ்த்தினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவர் 3 விக்கெட் (முகமது, ரோகித், கவுசிக்) வீழ்த்தி முத்திரை பதித்தார்.
Tags:    

Similar News