செய்திகள்
நெய்மர்

நெய்மர் வேண்டுமென்றால் 2314 கோடி ரூபாய் கொடுங்கள்: பார்சிலோனாவுக்கு பிஎஸ்ஜி செக்

Published On 2019-07-16 11:44 GMT   |   Update On 2019-07-16 11:44 GMT
நெய்மர் வேண்டுமென்றால் 300 மில்லியன் யூரோ கொடுங்கள் என்று பார்சிலோனாவிற்கு கிடுக்குப்பிடி போட்டுள்ளது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்.
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திடீரென நெய்மர் உலகின் பணக்கார கால்பந்து கிளப்பான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிக்குச் செல்ல விரும்பினார்.

அங்கு சென்றால் நெய்மரின்  புகழ் மங்கிவிடும், தலைசிறந்த கால்பந்து வீரர் என்ற பெயரை தக்கவைத்துக் கொள்ள முடியாது, பலோன் டி’ஆர் விருதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கால்பந்து வல்லுனர்கள் எச்சரித்தனர். பார்சிலோனா அணியும் அவரை விடுக்க விரும்பவில்லை. நெய்மர டிரான்ஸ்பரை தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தது.

நெய்மர் பிடிவாதமாக இருந்ததால் பார்சிலோனா அவருக்கு 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் பீஸாக அறிவித்தது. என்றாலும் பிஎஸ்ஜி அந்த பணத்தை ஒரே தவணையாக செலுத்தியது. ஆனால் பிஎஸ்ஜி-யில் நெய்மரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. நெய்மரால் பிஎஸ்ஜி-க்கும் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான் நெய்மர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்பி விரும்பினார். இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். பார்சிலோனாவும் அவரை திரும்ப அணியில் சேர்க்க விரும்புகிறது. ஆனால் பிஎஸ்ஜி நெய்மருக்காக செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதில் உறுதியாக உள்ளது.

இதனால் அவரின் டிரான்ஸ்பர் பீஸாக 300 மில்லியன் யூரோ (இந்திய பணமதிப்பில் 2314 கோடி ரூபாய்) நிர்ணயித்துள்ளது பிஎஸ்ஜி. இவ்வளவு பணத்தை கொடுக்க பார்சிலோனா தயங்குகிறது. பார்சிலோனா ஏற்கனவே அட்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடிய கிரிஸ்மானை தற்போதுதான் 107 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியது.



இதனால் பார்சிலோனா ஒஸ்மானே டெம்பேல், பிலிப்பே கவுட்டினோ ஆகியோரை தருகிறோம். அத்துடன் 40 மில்லியன் யூரோ தருகிறோம் என்று பிஎஸ்ஜி-யிடம் பேசியது. 40 மில்லியன் யூரோ என்ற சொற்பமான தொகையை தருகிறேன் என்று பார்சிலோனா கூறுவது  கேலிக்கூத்தானது என்று பிஎஸ்ஜி காட்டமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

நாங்கள் நெய்மர் உடன் மூன்று வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். அவருக்காக நாங்கள் செலவழித்த பணத்தை திரும்ப பெறாமல் விடமாட்டோம் என்பதில் பிஎஸ்ஜி உறுதியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பார்சிலோனா 300 மில்லியன் யூரோ செலவழித்தால் மட்டுமே நெய்மரை பெற முடியும்.
Tags:    

Similar News