செய்திகள்

லீக் சுற்றினை பரபரப்பாக்கிய இங்கிலாந்து - அரையிறுதிக்கு மல்லுகட்டும் 4 அணிகள்

Published On 2019-06-24 12:56 GMT   |   Update On 2019-06-24 12:56 GMT
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் மந்தமாக சென்ற லீக் சுற்று ஆட்டங்கள் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் கடந்த மாதம் (மே 30) தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற பத்து நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
 
இந்நிலையில், தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. லீக் சுற்றின் இறுதியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறும். லீக் சுற்றின் தொடக்கத்தில் இருந்தே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் அந்த நான்கு அணிகளுமே தற்போது புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ளன. ஆகையால் இந்த நான்கு அணிகள் தான் அடுத்த கட்டமான அரையிறுதி ஆட்டங்களுக்கு முன்னேறும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் லீக் சுற்றின் 27-வது ஆட்டத்தின் போது மிகவும் பலமிக்க இங்கிலாந்து அணியினை இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி இலங்கை அணிக்கு மட்டும் அல்லாமல் மேலும் சில அணிகளுக்கும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

இது குறித்து விவரம் பின்வருமாறு:-

நியூசிலாந்து:-

2019 உலக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி தற்போது வரை 6 போட்டிகளில் விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றியும் 1 போட்டி மழை காரணமாக கைவிடபட்டதன் மூலமாக 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்துவிடும்.

ஆஸ்திரேலியா:-

உலக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா இந்த முறையும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் வெற்றியும் 1 தோல்வியுடனும் (இந்தியாவுக்கு ஏதிராக) 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே ஆஸ்திரேலியா அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து விடும். 

இந்தியா:-



உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கோலி தலைமையிலான இந்திய அணியினை பொருத்தவரை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு ஏதிரான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 9 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.
 
இங்கிலாந்து:-



உலகக்கோப்பை தொடரினை நடத்தும் இங்கிலாந்து அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 2 தோல்விகளையும் அடைந்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொள்ளலாம். ஆனால் இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறிவிடும். ஆகையால் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்களில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

இலங்கை:-



உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கை அணி 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டு உள்ளது. இதனால் 6 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அதில் அனைத்திலும் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் இங்கிலாந்து அணி தான் விளையாட உள்ள எஞ்சிய 3 ஆட்டங்களில் இரண்டில் தோல்வி அடைய வேண்டும். ஒரு வேலை இங்கிலாந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்தால் புள்ளிகள் அடிப்படையில் 12 புள்ளிகளுடன் இலங்கை நான்காவது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பினை அடையும். 

வங்காளதேசம்:-



வங்காளதேசத்தினை பொருத்தவரை அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டு 5 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் வங்காளதேசம் அதில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். மேலும் இலங்கை தான் விளையாடவுள்ள எஞ்சிய 3 ஆட்டங்களிலும் தோல்வியும், இங்கிலாந்து தான் விளையாடவுள்ள எஞ்சிய 3 ஆட்டங்களில் இரண்டில் தோல்வி அடைந்தால் 11 புள்ளிகளுடன் வங்காளதேச அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

பாகிஸ்தான்:-



இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு ஏதிரான வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி ஒரு போட்டி மழை காரணமாக கைவிடபட்டு 5 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அரையிறுதி வாய்ப்பினை அடைய பாகிஸ்தான் அணி தான் விளையாடயுள்ள எஞ்சிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் இங்கிலாந்து அணி விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியும், வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் 3 போட்டிகளில் குறைந்தது ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைய வேண்டும்.

வெஸ்ட்இண்டிஸ்:-

நியூசிலாந்து ஏதிரான ஆட்டத்தின் போது நூல் இழையில் வெற்றியினை தவறவிட்ட(5 ரன்கள் வித்தியாசம்) வெஸ்ட்இண்டிஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி 4 தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டு 3 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் வெஸ்ட்இண்டிஸ் அணி அதில் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும், இங்கிலாந்து விளையாடும் எஞ்சிய 3 ஆட்டங்களில் தோல்வி அடைய வேண்டும் மற்றும் இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் எஞ்சிய 3 ஆட்டங்களில் இரண்டில் தோல்வி அடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் வெஸ்ட் இண்டிஸ் அணி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை அடையும்.

தென் ஆப்பிரிக்கா:-

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 தோல்வி ஒரு வெற்றி 1 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டு 3 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது.

ஆப்கானிஸ்தான்:-

இந்தியாவுக்கு ஏதிரான 28-வது லீக் ஆட்டத்தில் போராடி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியினை தழுவிய ஆப்கானிஸ்தான் அணி, தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டினை பொருத்தவரை இனி நடைபெற இருக்கும் ஆட்டங்களும் அனைத்து அணிகளுக்கும்  அரையிறுதி வாய்ப்பினை தக்கவைக்க மிகவும் முக்கியம் என்பதால் பரபரப்பிற்கு குறைவிருக்காது இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.   
Tags:    

Similar News