செய்திகள்

ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்: 4-வது வெற்றி ஆர்வத்தில் இந்தியா

Published On 2019-06-22 07:44 GMT   |   Update On 2019-06-22 07:44 GMT
இந்திய அணி 5-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

சவுத்தம்டன்:

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்டு ராபின் முறையில் மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன்னில் தோற்கடித்தது.

நியூசிலாந்துடன் மோத வேண்டிய 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 4-வது போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்னில் வீழ்த்தியது. 3 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி 5-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணியின் அதிரடி ஆட்டம் இன்றைய ஆட்டத்திலும் நீடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் இருக்கும் இந்தியா 4-வது வெற்றியை பெறுவதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காணும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு சதம் அடித்து அணியின் முதுகெலும்பாக உள்ளார். இதேபோல் கேப்டன் வீராட்கோலி, லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா, டோனி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோர் விக்கெட்டுக்களை கைப்பற்றி வருகிறார்கள். புவனேஷ்வர்குமார் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக முகமது ‌ஷமி இடம் பெறுவார். விஜய் சங்கர் காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

அந்த அணி ஆஸ்திரேலியா (7 விக்கெட்), இலங்கை (34 ரன்), நியூசிலாந்து (7 விக்கெட்), தென் ஆப்பிரிக்கா (9 விக்கெட்), இங்கிலாந்து (150 ரன்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது.

ஆப்கானிஸ்தான் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பெற கடுமையாக போராடும். பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்துவது அந்த அணிக்கு மிகப்பெரிய சவாலே.

Tags:    

Similar News