செய்திகள்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2019-05-05 14:14 GMT   |   Update On 2019-05-05 17:53 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #MIvKKR
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டமான 56-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கிறிஸ் லின், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இரண்டு ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்தனர். கிறிஸ் லின் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

பின்னர் சமாளித்துக் கொண்டு கிறிஸ் லின் மலிங்கா வீசிய 4-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். ராகுல் வீசிய 6-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் தூக்கினார். இதனால் கொல்கத்தா பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை தொட்டது.

7-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஷுப்மான் கில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 9-வது ஓவரில் கிறிஸ் லின் 29 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



அதன்பின் கொல்கத்தாவின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது. தினேஷ் கார்த்திக் 3 ரன்னிலும், அந்த்ரே ரஸல் ரன்ஏதும் எடுக்கமாலும் மலிங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் 10 ஓவரில் 83 ரன்களே எடுத்தது. அடுத்து வந்த நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 13 பந்தில் 26 ரன்கள் விளாசினார்.

ராபின் உத்தப்பா கடைசி வரை நின்று போராடி 40 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களே அடிக்க முடிந்தது.



இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்,  ரோகித் சர்மா களம் இறங்கினார்கள்.  ஆட்டத்தின் 6.1 ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் டி காக் 30 (23) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஜோடி சேர்நது ரன்களை குவிக்க துவங்கினர்.   இவர்களின் ஜோடி பிரிக்க எண்ணிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எண்ணம் தோல்வியில் முடிந்தது. இதன் மூலம் 16.1 ஓவரில் மும்பை அணி 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதில் ரோகித் சர்மா 55 (48), சூர்யகுமார் யாதவ் 46 (27) ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

கொல்கத்தா அணி சார்பில் வார்னர் 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். #IPL2019 #MIvKKR
 
Tags:    

Similar News