செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி- இளம் வீரர் ஷுப்மான் கில் அசத்தல் சதம்

Published On 2018-09-19 13:15 GMT   |   Update On 2018-09-19 13:15 GMT
விஜய் ஹசாரோ டிராபியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ஷுப்மான் கில் அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். #VijayHazareTrophy
விஜய் ஹசாரே டிராபியில் இன்று ஏராளமான ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் எலைட் குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் - இமாச்சல பிரதேச அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக மனன் வோரா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். மனன் வோரா 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து மந்தீப் சிங் 39 ரன்களும், யுவராஜ் சிங் 48 ரன்களும், குர்கீரத் சிங் 31 ரன்களும் அடித்தனர். ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் அடித்தார். இவரது சதத்தால் பஞ்சாப் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது.



பின்னர் 291 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இமாச்சல பிரதேச அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரசாந்த் சோப்ரா 95 ரன்களும், அடுத்து வந்த விக்கெட் கீப்பர் அங்கஷ் பெய்ன்ஸ் 56 ரன்களும் அடித்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் வெளியேற இமாச்சல பிரதேசம் 48.3 ஓவரில் 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் பஞ்சாப் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சித்தார்த் கவுல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News