செய்திகள்

இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் முரளி விஜய், கருண் நாயர் சொதப்பல்

Published On 2018-07-19 12:11 GMT   |   Update On 2018-07-19 12:11 GMT
இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் முரளி விஜய், கருண் நாயர் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #INDA
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் ரகானே, முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தற்போது இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடி வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் மூன்று பேரும் இடம்பிடித்துள்ளனர்.

நேற்று அணி அறிவிக்கப்படும் முன்பே முரளி விஜய் மற்றும் ரகானே ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கு முன்னோட்டாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கருண் நாயர் ஏற்கனவே இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 16-ந்தேதி இந்த போட்டி தொடங்கியது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி 197 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 62 ரன்களும், ரகானே 49 ரன்களும், ரிஷப் பந்த் 58 ரன்கள் சேர்த்தனர். ஆனால் முரளி விஜய் 8 ரன்களிலும், கருண் நாயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

421 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அதேபோல் முரளி விஜய் 5 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளனர். லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படாவிடில் முரளி விஜய் தொடக்க வீரராக களம் இறங்குவார். இந்த நிலையில் மோசமான ஆட்டம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கருண் நாயருக்கு ஆடும் லெவன் அணியில் இடம்கிடைப்பது சந்தேகமே. முதல் இன்னிங்சில் 49 ரன்னில் ஆட்டமிழந்த ரகனே, 2-வது இன்னிங்சில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Tags:    

Similar News