செய்திகள்

ஆண்டிகுவா டெஸ்ட் - வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 406 ரன் குவிப்பு

Published On 2018-07-05 20:41 GMT   |   Update On 2018-07-05 20:41 GMT
வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 406 ரன்களை குவித்துள்ளது. #WIvBAN
ஆண்டிகுவா:

வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வங்காள தேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்  இக்பால், லியான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடியதால் அணியின் எண்ணிக்கை 100 ரன்களை கடந்தது.

113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 68 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 88 ரன்களுடனும், பிஷு ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிராத்வைட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 121 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் 68 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஜேசன் ஹோல்டர், கீம்ர் ரோச் ஓரளவு ரன்கள் எடுத்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137.3 ஓவரில் 406 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #WIvBAN 
Tags:    

Similar News