செய்திகள்

இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதுவது ஐதராபாத்தா? கொல்கத்தாவா?

Published On 2018-05-24 06:17 GMT   |   Update On 2018-05-24 06:17 GMT
ஐ.பி.எல். ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் நாளை மோதுகிறது. இதில் எந்த அணி இறுதிப்போட்டியில் சென்னையுடன் விளையாட போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2018 #KKRvSRH #IPLFinal
கொல்கத்தா:

ஐ.பி.எல். போட்டியில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி ‘குவாலிபையர்2’ ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் வெளியேற்றப்பட்டது.

இன்று ஓய்வு நாளாகும். ‘குவாலிபையர்2’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்-தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேறும்.


ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ் பாண்டே, யூசுப்பதான், பிராத்வெயிட், ரஷீத்கான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது.

மேலும் உள்ளூரில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே. கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ்லின், சுனில் நரீன், ஆந்த்ரே ரஸ்சல், உத்தப்பா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2018 #KKRvSRH #IPLFinal
Tags:    

Similar News