செய்திகள்

பெங்களூர் அணி 7-வது தோல்வி- விராட்கோலி ஏமாற்றம்

Published On 2018-05-08 05:28 GMT   |   Update On 2018-05-08 05:28 GMT
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 7-வது தோல்வியை தழுவியதால் விராட்கோலி ஏமாற்றம் அடைந்தார். #IPL2018 #SRH #RCB #ViratKholi
ஐதராபாத்:

ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 146 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

கேப்டன் வில்லியம்சன் 39 பந்தில் 56 ரன்னும் (5 பவுன்டரி, 2 சிக்சர்), சகீப்-அல்-ஹசன் 32 பந்தில் 35 ரன்னும் (5 பவுன்டரி) எடுத்தனர். சவுத்தி, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 ரன்னில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

விராட் கோலி அதிகபட்சமாக 30 பந்தில் 39 ரன்னும் (5 பவுன்டரி, 1 சிக்சர்), கிராண்ட்ஹோம் 29 பந்தில் 33 ரன்னும் (1 பவுன்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சகீப்- அல்-ஹசன் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷ்த்தான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பெங்களூர் அணி 7-வது தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த தோல்வியால் கேப்டன் விராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தப் போட்டியில் இருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டு விட்டோம். இந்த சீசனில் எங்களது கதை முடிந்து விட்டது. இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்விக்கு தகுதியானவர்களா? என்று தெரியவில்லை. போதுமான அளவு திறமையை வெளிப்படுத்தவில்லை.

10-15 ரன்கள் குறைவாக கொடுத்து இருக்க வேண்டும். ஆனாலும் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.

ஐதராபாத் அணியில் சில வீரர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுத்து விட்டனர். ஐதராபாத் அணியின் பந்துவீச்சு மிகவும் வலுவான தாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூர் அணி 11-வது ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந் தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 10-ந் தேதி எதிர்கொள்கிறது. #IPL2018 #SRH #RCB #ViratKholi
Tags:    

Similar News