செய்திகள்

உலக போட்டியில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு- காமன்வெல்த்தில் சாதித்த தமிழக வீரர்கள் நம்பிக்கை

Published On 2018-04-25 07:08 GMT   |   Update On 2018-04-25 07:08 GMT
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக காமன்வெல்த்தில் சாதித்த தமிழக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை:

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்கள், சரத்கமல், சத்யன், அமல்ராஜ் ஆகியோர் பதக்கம் வென்றனர்.

சரத்கமல் அணிகள் பிரிவில் தங்கமும், இரட் டையர் பிரிவில் வெள்ளியும், ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் பெற்றார். சத்யன் அணிகள் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையரில் வெண்கலமும் பெற்றார். அமல்ராஜ் அணிகள் பிரிவில் தங்கம் வென்றார்.

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இவர்களுக்கு சென்னை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

சென்னை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் ஜே.செல்வக்குமார், முன்னாள் டேபிள் டென்னிஸ் வீராங்கனை அருள்செல்வி, இன்டஸ்ட்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சமிர்பரத் ராம் ஆகியோர் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டினார்கள்.

பாராட்டு விழாவில் சத்யன் கூறும் போது “காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று எங்களது திறமையை வெளிப்படுத்தினோம். இதே போல உலக சாம்பியன் ஷிப் போட்டியிலும் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் சவாலாக இருக்கலாம். பிரான்ஸ், கொரியா எங்களது பிரிவில் உள்ளன. இந்த முறை பதக்கம் வெல்வோம் என்று நம்புகிறேன்.

சரத்கமல் கூறும் போது உலக போட்டியில் நாங்கள் சிறந்த குரூப்பில் உள்ளோம். இந்த முறை பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். அமல்ராஜ் கூறும் போது, பேட்மின்டனை போலவே டேபிள் டென்னிசும் தற்போது பிரபலம் அடைந்துள்ளது.

சரத்கமல், சத்யன் திறமை வாய்ந்த வீரர்கள். இருவரும் இந்த விளையாட்டு முன்னேற்றம் அடைய உதவியாக இருக்கிறார்கள் என்றார்.
Tags:    

Similar News