செய்திகள்

பாகிஸ்தான் சூப்பர் லீக்- இஸ்லாமாபாத் 2-வது முறையாக சாம்பியன்

Published On 2018-03-26 09:21 GMT   |   Update On 2018-03-26 09:21 GMT
பாகிஸ்தான் சூப்பர் லீக் பெஷாவர் ஷல்மி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இஸ்லாமாபாத் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. #PSL #IUvPZ
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக்கின் 3-வது சீசன் கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் பலத்த பாதுகாப்பிற்கு இடையே நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் பெஷாவர் ஷல்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முந்தைய இரண்டு சீசனில் இரு அணிகளும் தலா ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் இறங்கின.

டாஸ் வென்ற பெஷாவர் ஷல்மி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் கம்ரான் அக்மல் 1 ரன்னிலும், பிளெட்செர் 21 ரன்னிலும், மொகமது ஹபீஸ் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஜோர்டான் 36 ரன்களும், லியாம் டாசன் 33 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோருக்கு உதவியாக இருந்தனர். ரியாஸ் வஹாப் அதிரடியாக 14 பந்தில் 28 ரன்கள் அடிக்க பெஷாவர் ஷல்மி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.



பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் லூக் ரோஞ்சி 26 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்தார். சஹிப்சதா பர்ஹான் 33 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். ரோஞ்சி அவுட்டாகும்போது இஸ்லாமாபாத் 8.5 ஓவரில் 96 ரன்கள் குவித்தது.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இஸ்லாமாபாத் திணறியது. 8-வது வீரராக களம் இறங்கிய ஆசிஃப் அலி 6 பந்தில் 3 சிக்சருடன் 26 ரன்கள் அடிக்க 16.5 ஓவரிலேயே 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து இஸ்லாமாபாத் வெற்றி பெற்று, 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 22 பந்தில் 52 ரன்கள் குவித்த ரோஞ்ச் ஆட்டநாயகன் விருதுடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். #PSL #IUvPZ #SportsNews
Tags:    

Similar News