செய்திகள்

வங்காளதேச வீரர்கள் தங்கிய அறை கண்ணாடி உடைப்பு- ஐ.சி.சி. நடவடிக்கை

Published On 2018-03-17 06:43 GMT   |   Update On 2018-03-17 06:47 GMT
இலங்கை - வங்காளதேச அணி வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அறை கதவின் கண்ணாடியை உடைத்தது குறித்து வங்காளதேச வீரர்கள் மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. #NidahasTrophy
கொழும்பு:

இலங்கை - வங்காளதேச அணிகள் நேற்று மோதிய பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தாலும் ஆடுகளத்தில் வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் கிரிக்கெட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

கடைசி ஓவரின் போது நோபால் விவகாரம் தொடர்பாக வங்காளதேச வீரர் மகமதுல்லா நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது தண்ணீர் பாட்டீல் கொண்டு வந்த வங்காளதேச மாற்று வீரர் இலங்கை கேப்டன் திசாரா பெரைராவிடம் ஏதோ கோபத்தில் கூறினார். இதனால் இலங்கை வீரர் ஒருவர் அவரை தள்ளினார். இது மோதலாக மாறியது.



அப்போது வீரர்கள் அறையில் இருந்த வங்காளதேச கேப்டன் சகீப்-அல்-ஹசன் கோபத்தில் தங்களது வீரர்களை வெளியே வருமாறு கத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முடிவை வங்காளதேச வீரர்கள் மாற்றிக்கொண்டனர். அதை தொடர்ந்து மகமதுல்லா 5-வது பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.



இந்த வெற்றியை வங்காளதேச வீரர்கள் மைதானத்தில் பாம்பு நடனம் ஆடி கொண்டாடினார்கள். அவர்கள் கத்தியப்படியே நடனம் ஆடினர்.



அப்போது இலங்கை வீரர் குசால் மெண்டீஸ் வங்காளதேச வீரர்களை நோக்கி கோபமாக திட்டினார். அவரை வங்காளதேச வீரர் தமிம் இக்பால் சமதானம் செய்தார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே வங்காளதேச வீரர்களின் அறையில் (டிரெசிங் ரூம்) இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் சிலர் இதை உடைத்து உள்ளனர். அங்குள்ள கேமிராவில் இது பதிவானது.

இதையடுத்து அந்த வீரர் யார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிந்தது. வங்காளதேச அணி நிர்வாகம் அதற்காக இழப்பீட்டை ஈடு செய்வதாக அறிவித்தது.

இந்த விவகாரத்தில் வங்காளதேச வீரர்கள் மீது ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வங்காளதேச வீரர் தமிம் இக்பால் கூறும்போது, “கடைசி கட்டத்தில் உணர்ச்சி வசமாகிவிட்டது. நோபால் குறித்து கவனத்துக்கு கொண்டு சென்றோம். இந்த சம்பவத்தை வைத்து வேறு எதையும் தவறாக உருவாக்கும் எண்ணம் இல்லை. வெற்றிக்கு பிறகு எங்கள் கோபம் மறந்துவிட்டது” என்றார்.

சகீப்அல்ஹசன் கூறும்போது, “அதிக உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இந்த போட்டி அமைந்துவிட்டது. இலங்கைக்கும், எங்களுக்கும் மைதானத்தில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால் களத்துக்கு வெளியே நாங்கள் நண்பர்கள். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம். ஒரு கேப்டனாக நான் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த போட்டிகளில் கவனமாக இருப்பேன்” என்றார்.
Tags:    

Similar News