செய்திகள்

விஜய் ஹசாரே டிராபியில் ஆந்திரா மற்றும் சவுராஷ்டிரா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2018-02-22 12:29 GMT   |   Update On 2018-02-22 12:29 GMT
விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்களில் ஆந்திரா, சவுராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. #VijayHazare
பிசிசிஐ-யின் கீழ் இயங்கும் மாநில அணிகளுக்கு இடையில் விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்றன.

இன்று நடைபெற்ற ஒரு காலிறுதியில் ஆந்திரா - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆந்திரா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி ஆந்திராவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்காமல் 111 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆந்திரா அணி சார்பில் சிவகுமார் 4 விக்கெட்டும், பாத் 3 விக்கெட்டும், அய்யப்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா களம் இறங்கியது. அந்த அணி 28.4 ஓவரில் 112 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறின.

மற்றொரு ஆட்டத்தில் பரோடா - சவுராஷ்டிரா அணிகள் மோதின. டாஸ் வென்ற சவுராஸ்டிரா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பரோடா அணி முதலில் களம் இறங்கியது 5-வது வீரராக களம் இறங்கிய குருணால் பாண்டியா 61 ரன் அடிக்க, அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

பின்னர் 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பரோட் 82 ரன்னும், கேப்டன் புஜாரா 40 ரன்னும், வசவதா அவுட்டாகாமால் 45 ரன்களும் எடுக்க 48.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

24-ந்தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் மகாராஷ்டிரா - கர்நாடகா, 25-ந்தேதி நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆந்திரா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 27-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
Tags:    

Similar News